×

நடிகர் எம்.என்.நம்பியார் பயன்படுத்திய புகைப்படம், பொருட்களை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் புகைப்படங்கள், விருதுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற மகன்களும், சினேகலதா என்ற மகளும் உள்ளனர். நம்பியாரின் சொத்துகள் பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அதன் பிறகு சுகுமாரன் காலமாகிவிட்டார். இந்நிலையில், சுகுமாரனின் மகனும், நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில், தனது தாத்தா நம்பியாரின் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், விருதுகள் மற்றும் கோப்பைகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை அத்தை சினேக லதாவின் வசம் உள்ளது. சினேகலதா, நம்பியாருடன் ஒரே குடும்பமாக இருந்தபோது, அந்த பொருட்களை அனைவரும் வைத்திருந்ததாக சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த பொருட்களை தனக்கு தருவதாக ஒப்புக்கொண்ட அத்தை சினேகலதா, தான் தனியாக வீடு வாங்கி குடியேறிய பிறகு, தற்போது தர மறுக்கிறார். எனவே அந்த பொருட்களை தன்னிடம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கில் குறிப்பிடப்பட்ட விருதுகள் மற்றும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, சினேகலதா நம்பியார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தந்தை பயன்படுத்திய பொருட்கள் தனக்கு தான் சொந்தம். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக புதிதாக ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags : MN , Photograph used by actor MN Nambiar Appointment of Advocate Commissioner to examine materials; High Court order
× RELATED ஒவ்வொரு வீட்டிலும் சிங்கப்பெண் இருப்பார்: ஷில்பா மஞ்சுநாத்